புதன், 29 செப்டம்பர், 2021

அன்புள்ள சினேகிதனே...

அன்புள்ள சினேகிதனே...


டை மழையில் நனைந்தேன்,

குடை கொண்டு வந்தாய்,

வெயில் காலம் நடந்தேன்,

நிழல் போலத் தொடர்ந்தாய்...


என்னை சூழ்ந்த காற்றாய்

சுவாசம் வந்து சேர்ந்தாய்,

எண்ணச் சுமையின் தீர்வாய்-பல

வண்ணம் தீட்டிப் போனாய்...!


விம்மிய விழிநீர்த் துளியை

விரல்நுனி கொண்டு துடைத்தாய்...!

மனதின் குமுறலைக் கூட

மறைய வைத்துக் கடந்தாய்...!


கண்ணீர் துடைத்த கரமா-நீ

கருவிழி போன்ற வரமா...?

நான் சாய்ந்தழுத மரமா-நீ

எனைச் சார்ந்துவந்த சுரமா...?


புயல்மழை தாக்கிய பூமியில்

புதுவிடியலாய் வந்தது நீயடா...

பூகம்பம் வந்த பூவினில்-புதுப்

பனியாய் படர்ந்ததும் நீயடா...!


நான் தொலைந்தத் தடத்தில்-எனை

எடுத்துக் கொண்டவன் நீயடா...!

தொலைக்க விரும்பா உயிராய்-என்

உறவாகிப் போனதும் நீயடா...!


ஓ...

கண்டது எல்லாம் கனவா...?

காணும் பொழுது நனவா...?

கண்கள் மூடிடும் உறவா-நீ

கணநொடி நடந்த நிகழ்வா...?


நடமாடும் கனவை கண்டு-குறு

நகை வெட்கம் கொண்டு,

உயிருக்குள் உன்பார்வை சொட்ட,

நெஞ்சுக்குள் வேர்த்து கொட்ட...


எந்தன் உயிர்நாடி எங்கெங்கும்

உன் ஞாபகங்கள் உறவாடி,

உனக்கே உனக்காக என்னை

உயிலெழுதி வைத்தேன் கண்ணா...!


ஆசைநேசகா அதிரூப சுந்தரா

காலங்காலமாக வாழ்ந்திட வேண்டும்,

கணநொடிக் கனவாய் கலைந்து

தேடித் தொலைய வைக்காதே...!




-கவிஞர் பூந்தோட்டக் கவிதைக்காரன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பொழுதுகளை உங்கள் வசமாக்கி,
கருத்துகளை பதிவின் வசமாக்கி
செல்லும் வாசகர்களுக்கு நன்றிகள்...!
ஒவ்வொரு பதிவுக்கும் கருத்துகளை
எதிர்பார்த்து காத்துக்கொண்டிருப்பேன்.