சனி, 24 அக்டோபர், 2020

என் அனைத்துமானவள்...

என் அனைத்துமானவள்


அவளது பார்வையில்

ஒருகணம் கண்கூச,

மறுகணம் நான்பேச

தயக்கத்தோடு நின்றிருந்தேன்...


இடைவிடாமல் இமைக்கிறாள்...!

அவளது விழிகளோ

இடம்தேடி அலைகிறது

என்னிதய சாம்ராஜ்ஜியத்தில்...!


இடத்தைக் கொடுத்தால்

மடத்தைப் பிடிப்பாள்

என்ற அச்சமில்லை-நானும்

அதற்கே ஆசைகொண்டேன்...


கடுகளவு காதல்கொண்டேன்-அதை

பூர்த்தியாய் கொண்டேன்,

கடலளவு காதல் தந்தாள்-அவள்

நடுவினிலே தீவுகளானேன்...


தீவிரமாய் வந்து-அலையாக

தழுவி செல்கிறாள்,

அவளது அன்பினாலே

அதிகாரம் செய்கிறாள்...!


அவளது மடியினில்

குழந்தை போலானேன்,

கொஞ்சி மகிழ்கிறாள்

கெஞ்ச வைக்கிறாள்...


கஞ்ச விழிகளால்

கண்ஜாடை செய்கிறாள்,

கட்டிப் பிடித்தாலோ 

கண்டபடி திட்டுகிறாள்...


அவள் சேலையழகோ-எனக்கு

வண்ணச் சோலையானது,

அவளது உதடுகளோ

நானுறிஞ்சும் இதழ்களானது...!


அவளெச்சில் நீரோ

ஒத்தமரத்து பதநீரு,

ருசிபார்க்க ருசிபார்க்க

போதையேற்றும் கள்ளாகுது…


இரட்டை இதழ்கொண்ட

அதிசய மலரவள்,

நிறம்மாறி வாடாத

நிரந்தர குணத்தவள்...


போதைத் தடுப்புச்

சட்டத்தின் கீழ்

அவளைக் கைது

செய்யப் போகிறேன்…!


கைதியை காதலிக்கும்

ரகசிய காவலனாகிறேன்,

அவளை மகாராணியாக்கி

அன்பு காதலனாகிறேன்...!


அவளை மனைவியாக்கிட

அதிகம் காதல்செய்கிறேன்,

தங்கத்தில் தாலிசெய்ய

மாதத்தவணை கட்டுகிறேன்…!


தாவணிக்குள் இருக்கும்

தாரணி அவளை

புடவைக்குள் குடிவைக்க

பூக்களைக் கேட்கிறேன்…!


பூவையவளுக்கு பூக்களும்

பூஞ்சேலையாக சம்மதிக்க,

அத்தனை பூக்களையும்

அதிகாலையில் நகலெடுத்தேன்...!


அவளது மேனியில்

அழகாக மலரட்டுமென்று

மொட்டுகள் அனைத்தையும்

மெட்டாய் பறித்தேன்…!


அவள் அங்கம்தொட்ட

அத்தனை மலர்களும்

அதிகாலைக் குயிலோடு

அழகான கானம்பாடுது...


ஆவணித் திங்கள்

முதலாம் நாளிலே

தாவணி தென்றலவளும்

சம்மதம் தருவாளா...?


மலரோடு மலரான

மங்கை அவளுக்கோ

மாராப்பாய் ஆனேன்-அவளோ

மத்தாப்பாய் வெடித்தாள்…!


மலர்களைப் போலவே

மௌனம் காட்டுகிறாள்,

வண்டாய் சென்றால்

வெட்கம் கொள்கிறாள்...


தாலி கட்டி அவளுக்கு

கணவனாக சேவைசெய்ய

சம்மதமும் தந்துவிட்டாள்

தாரகை அவளும்...!


அவளோடு மட்டும்

அவளுக்காக மட்டும்

அனைத்தும் ஆனேன்-அவளும்

எனக்கு அனைத்துமானாள்...!!!



Video


கவிஞர் -பூந்தோட்ட கவிதைக்காரன்



4 கருத்துகள்:

பொழுதுகளை உங்கள் வசமாக்கி,
கருத்துகளை பதிவின் வசமாக்கி
செல்லும் வாசகர்களுக்கு நன்றிகள்...!
ஒவ்வொரு பதிவுக்கும் கருத்துகளை
எதிர்பார்த்து காத்துக்கொண்டிருப்பேன்.