புதன், 11 நவம்பர், 2020

கல்லறை காதலன்

கல்லறை காதலன்


ண்கள் உறங்கவில்லை

பெண்ணே உன்நினைவோ

கத்திபோல குத்துதடி-மனம்

கத்திகத்தி வலிதேடுதடி...!


வாழ்க்கையோ என்னவென்று

எனக்கின்னும் விளங்கவில்லை,

விதி போடும் கணக்கிற்கு

விடை எழுத முடியவில்லை...!


இதயமோ வலிக்கிறதை-எனக்கு

சொல்லத் தெரியவில்லை,

இதயம் உடைந்து போனதை

ஒட்டி வைப்பார் யாருமில்லை...


உடைபட்ட துகள்களெல்லாம்

உயிரைத்தேடி கிழிக்கிறதே...

கிழிக்கப்பட்ட என்னுயிரோ

ரணமாய் என்னுள் துடிக்கிறது...!


இதயத்தின் ஈரமெல்லாம்

இறுக்கிப்பிழிந்து போனாயே...

இன்னும் கொஞசம் துடிப்போடு

வலிதாங்கிக் கொல்கிறது...!


கண்ணே நம் காதலை

தியாகம் நீ செய்வதற்கு

உன்னவன் என்ன யாகம்

வளர்த்தானோ தெரியவில்லை...


மணக்குமத்தனை பூக்களும்-என்

பிணத்தை மூடிக்கிடக்கிறதே...

நானுயிராய் நினைத்த காதலும்

கல்லறை தேடிப் போனதே...


ஈரமிருக்கிறதா பெண்ணே-உன்

கண்களில் ஈரமிருக்கிறதா...!

ஈரமிருந்தால் ஒருமுறை-என்

கல்லறைக்கு வந்துபோய் விடு...


நானிறந்த சேதியை-உனக்கு

யார் சொல்ல வருவாரோ...

நீசெல்லும் திசையெல்லாம்

என்னுயிரோ தினம் வரும்...!


காற்றோடு கலக்கப்பட்டேன்

உன்மூச்சில் குடிபுகுவேன்,

சம்மதமே இல்லாமல்-உன்

பக்கம் கூட வரமாட்டேன்...!


நீயெனைப் புடைத்தெடுத்தாய்

நானோ புதைக்கப்பட்டேன்,

புதுப்புதுக் கவிதைகளை

தினமெழுதி வைத்துவிட்டேன்...!


ஒருமுறை வந்துபாரடி-என்

கல்லறையோ கவிதையாகும்,

கவிதைக்குள் நானோ

கவிஞனாய் குடியிருப்பேன்...!





-கவிஞர் பூந்தோட்ட கவிதைக்காரன்




3 கருத்துகள்:

பொழுதுகளை உங்கள் வசமாக்கி,
கருத்துகளை பதிவின் வசமாக்கி
செல்லும் வாசகர்களுக்கு நன்றிகள்...!
ஒவ்வொரு பதிவுக்கும் கருத்துகளை
எதிர்பார்த்து காத்துக்கொண்டிருப்பேன்.