சனி, 10 அக்டோபர், 2020

காலமெல்லாம் காதல் வாழ்க

காலமெல்லாம் காதல் வாழ்க


னைவியின் மடியில்

மயங்கி கிடக்கிறேன்

அவளிதயத் துடிப்பினை-நான்

இதமாய் கேட்கிறேன்...!


செவிகளைத் திறந்து-அவை

உள்ளே நுழைகிறது,

மூளையின் நினைவகத்தை

ஆக்கிரமித்துக் கொள்கிறது...!


நீ தூங்க என்னிதயம்

தடையாக துடிக்கிறதா...?

கொஞ்சநேரம் அவைகளை

நிறுத்தவா என்கிறது...


நானாசை கொண்ட

கண்ணாளனே உனக்கு

தாலாட்டுபாடவா...?

நீ தூங்கு என்கிறது...!


அதைக் கேட்ககேட்க-எனக்கு

மயக்கம் தெளிகிறது,

இருந்தும் மௌனமாய்

கேட்டுக் கொள்கிறேன்...


மன்னவா உன்னை

மண்மீது கண்டேன்,

இப்போது உன்னை

என்மீது கொண்டேன்...!


என்னாசைக் கணவனே

என் ஆபரணம் நீ...!

நான் பொக்கிஷமாய் காக்கும்

சொக்கத்தங்கம் நீ...!


முழு சுதந்திரத்தை-நீ

எனக்குக் கொடுத்தாய்

நானோ உன்னை

அதிகாரம் பண்ணுகிறேன்,


கோபமே இல்லாமல்-என்னை

கொண்டாடுகிறாய் நீ...!

ஏனென் மேல் உனக்கு

அவ்வளவு காதலா என்கிறது...!


மௌனமாய் எனக்குள்

நானே சிரிக்கிறேன்,

பதில்களேதும் இல்லாமலே

பவ்யமாய் தூங்குகிறேன்...


மறு நாளோ

அவள் தூங்க

என் இதயம்

அவளிடம் சொல்கிறது...


அன்னையின் அன்பினை

அப்படியே தந்தவளே...

நானாணென்ற அதிகாரத்தை

முழுவதுமாய் தந்தவளே...!


தாய்க்குப் பின்னால்

தாரம் என்பதை

நம் காதலே-இங்கு

எடுத்துச் சொல்லும்...!


என்னிதய நரம்புகளில்

ஒருங்கிணைந்தவள் நீ...!

அதன் துடிப்புகளை சீராக்கும்

குருதியின் உறுதியும் நீ...!


எனக்குள் முழுவதும்

அடைந்து கிடக்கும்

செல்ல தேவதையே...

மெல்ல கேளடி நீ...!


நீ கேட்க நினைப்பதெல்லாம்

என்னிதயம் பேசுகிறது

உன் செவி திறந்து

உள் நுழைகிறதா...?


என் உயிரானவளே...

உயிருக்கு உதிரமானவளே...

எங்கு கண்டேனோ-உனை

எப்படி கண்டேனோ...?


அன்றே உனக்குள்

நானடைந்து கொண்டேன்,

காதலை தீனியாயிட்டு

என்னை அடைகாத்தாயே...!


முழுவதுமாய் எனைபெற்று

மறுபடியெனக்கு தாயானாயே...

உனக்காக என்னுலகம்

தருவது நியாயம்தானே...!


உன்னோடு வாழ்கிறேன்

நீயில்லா நாட்களோ

எனக்கு நரகமென்பதை

நினைத்தாலே வலிக்கிறது...!



கவிதை காணொளி


-கவிஞர் பூந்தோட்ட கவிதைக்காரன்



2 கருத்துகள்:

பொழுதுகளை உங்கள் வசமாக்கி,
கருத்துகளை பதிவின் வசமாக்கி
செல்லும் வாசகர்களுக்கு நன்றிகள்...!
ஒவ்வொரு பதிவுக்கும் கருத்துகளை
எதிர்பார்த்து காத்துக்கொண்டிருப்பேன்.