திங்கள், 26 அக்டோபர், 2020

அப்பாவின் வருகை...

 அப்பாவின் வருகை...


(வெளிநாடு சென்ற தன் தந்தையின் வருகைக்காக ஏங்கித்தவித்த ஒரு குழந்தையின் எதிர்பார்ப்பே இந்த கவிதை வரிகள்...)


டைவிடா உழைப்பு

இடையினில் களைப்பு,

இரும்பு உடலில்

இடைவிடா ஊடல்கள்,


தேகமோ வேர்வை வாடை

வேகமோ மெய் ஜாடை...!

எலும்பின் மஜ்ஜைகள்

உருக்கப்பட்ட நேரங்கள்,


ரத்தத்தை உருமாற்றி

வேர்வையாய் சொட்டவைத்தாய்,

வேதனைகள் அடக்கிவைத்து

சாதனைகள் செய்து வந்தாய்,


கட்டினவள் நினைவு

கணநேரம் வந்தாலும்,

கண்ணெட்டா தூரத்தில்

துயர்பட்ட நெஞ்சமே...!


ஊருக்குள் விட்டமனம்

ஊரெல்லை தாண்டவில்லை,

உறவுக்காய் நீ போன

இடமோ வெகுதூரம்...!


ஆகாயவிமானத்தை-உன்னால்

அண்ணாந்து பார்த்தேன்,

அப்பாவின் வருகையென

நாள்தோறும் ஏமாந்தேன்,


ஐந்தாண்டு பிரிவுக்குபின்

ஆறுவயதில் சேர்ந்தாய்,

விமானச் சத்தமும்-இன்று

விடுப்பு தந்து போனது...!


புகைப்படம் காட்டி

அப்பா என்றாள் அம்மா...!

ப்பா என்று அழைத்த

ஞாபகம் வந்து போகிறது...


நீ கொடுத்தனுப்பின-என்

நட்பு பொம்மைகள் இன்று

மாயையான பொய்

பிம்பங்கள் ஆனது...


உன்னை பார்க்கும் ஆவலில்

ஆசையாய் சோறூட்டிய-என்

தோழி பொம்மையையும்

இன்று மறந்தேன் அப்பா...!




-கவிஞர் பூந்தோட்ட கவிதைக்காரன்


6 கருத்துகள்:

  1. உண்மையான வரிகள் சூப்பர்
    வாழ்த்துக்கள் சகா

    பதிலளிநீக்கு
  2. ரொம்ப ரொம்ப ௮ழகாயிருக்கு....

    பதிலளிநீக்கு

பொழுதுகளை உங்கள் வசமாக்கி,
கருத்துகளை பதிவின் வசமாக்கி
செல்லும் வாசகர்களுக்கு நன்றிகள்...!
ஒவ்வொரு பதிவுக்கும் கருத்துகளை
எதிர்பார்த்து காத்துக்கொண்டிருப்பேன்.