புதன், 28 அக்டோபர், 2020

மனிதர்கள் வாழும் காடு...

மனிதர்கள் வாழும் காடு


ண்ணங்கள் கொட்டிக் கிடந்தும்

பல வண்ணங்கள் தீட்டப்பட்டும்,

எவராலும் ரசிக்கப்படாத ஓர்

அழகிய இதயம் அவளுக்கானது...


அனுமதி கொடுக்கப்படாத பல

கனவுகள் அங்கு ஏராளம்,

தடைசெய்யப்பட்ட நினைவுகளும்

அங்கு தாராளம் உண்டு...


கனவுகளில் கட்டி வைப்பாள்

எவராலும் கட்டப்படாத மாளிகை,

அவள் எண்ணங்களோ அங்கு

பல்லாயிரம் ஓவியங்கள் ஆகும்...


ஆசைகளை அடக்கி வைத்திருக்கும்

அழகிய பெட்டகம் அவளிதயம்,

அவள் ஆசைகளை நிறைவேற்ற 

அவன் ஒருவனுக்கே அனுமதி...


ஊர் எல்லையை கூட

அவள் தாண்டினது இல்லை,

ஆகாய எல்லை வரையிலும்

அவளுக்குள் ஆசை உண்டு...


அவள் வயதோ மூவேழு

வாக்கப்படும் நாளுமேழு

எந்த திசைக் கண்ணனோ-இவளை

கொள்ளையிடும் மன்னவன்...!


எதிர்ப் பார்த்த அந்நாளோ...!

நெருங்கிவரும் நன்நாளோ...!

ஆசை கனவுகள் எல்லாம்

அங்கீகாரம் பெறும் இந்நாளோ...!


அவளுக்கான இதயம் அது...!

அவனுக்கு மட்டுமே அது...!

கெட்டி மேளம் கொட்டிட

அவனோ தாலிக்கொடி கட்டிட...!


இனிதே ஆரம்பமானது இல்லறம்....!

ஒருநாள் இரண்டுநாள் என

அப்படியே நாளுக்கு நாள்

நகர்ந்து கொண்டே போனது...!


இவள் கட்டிவைத்த கோட்டையின்

ஓவியங்கள் களவாடப்பட்டது...

வர்ணங்கள் அத்தனையும் அவனால்

கலைக்கப்பட்டு கலை இழந்தது...!


கனவுகளோ சிதைக்கப் பட்டு,

நினைவுகளோ உடைக்கப் பட்டு,

கோட்டையோ சரிக்கப் பட்டு,

கதிகலங்கிப் போனது அது...!


ஒன்றல்ல இரண்டல்ல அவளின்

ஓராயிரம் ஆசைகளும் அழகிய

பெட்டகத்தோடு அவன் ஒருவனால்

நாடு கடத்தப்பட்டு போனது...


குடித்து வெறித்து நடந்தான்,

குடித்தனம் விட்டு போனான்,

குடிவைக்க கூட்டி வந்தவளின்

கூட்டைக் கலைத்து போனான்...!


பத்தினிப் பெண்ணின் பத்தியத்தை

பார்க்க பாய்ந்தவர்கள் உண்டு...

பயந்தவளோ என்ன செய்வாள்..!

ஓடினாள் கண்ணுக்கெட்டாத தூரம்...


அங்கே தூரத்தெரிந்த கோபுரம்

கோவிலென உள் நுழைந்தாள்,

தஞ்சம் கேட்டு தானலைந்தாள்-அங்கும்

மஞ்சமிடச் சொல்லும் கயவர்களே...!


கண்ணில் நீர் வழிந்தோட

மனதின் குமுறலோடு அழுதாள்...

அழுதாலும் விடவில்லை-அவளது

பூமேனி உழப்பட்டு உதறப்பட்டாள்...!


குற்றுயிரோடு அவளைக் கண்டு

குள்ளநரி கூட்டங்கள் ஓடியது,

மனிதர்கள் வாழும் காட்டில்

கவனத்தோடு ஓட மறந்தாள்...


குருதி உறைந்து போய்

உருக்கப்பட்ட மெழுகானாள் அவள்,

அவளது அழகிய சோலையோ

பாலைவனக் கானலானது இன்று...!


காகிதக் கப்பலுக்கும் அங்கு

இடமில்லை என்று வாசிக்கப்பட்டது,

அவளுடல் விட்டுப்போன உயிரின்

குமுறல்களோ இன்றும் கேட்கிறது...


எண்ணங்களும் வண்ணங்களும்

நிறைந்த அவளாசைகளோ

தண்ணீரில் போடப்பட்டு அழிந்த

ரங்கோலி கோலங்கள் ஆனது...


Video


-கவிஞர் பூந்தோட்ட கவிதைக்காரன்


2 கருத்துகள்:

  1. நம்பிக்கையால் வைக்கப்பட்ட நேசத்தால், பெண்களுக்கு ஏற்படும் பேரழிவு இது... மிகவும் ௨ண்மையான ( கொடுமையான) வருத்தமான வரிகள்.

    பதிலளிநீக்கு
  2. அனைத்து கவிதைகளும் சிறப்பு வாழ்த்துக்கள் இன்னும் பல தருக்க காத்திருக்கேன்

    பதிலளிநீக்கு

பொழுதுகளை உங்கள் வசமாக்கி,
கருத்துகளை பதிவின் வசமாக்கி
செல்லும் வாசகர்களுக்கு நன்றிகள்...!
ஒவ்வொரு பதிவுக்கும் கருத்துகளை
எதிர்பார்த்து காத்துக்கொண்டிருப்பேன்.