வியாழன், 30 ஜூன், 2022

மழைக்காலை

 மழைக்காலை


வைரத்துளி வந்துவிழ

வதனங்கள் மலர்ந்தது...!

பனிக்காற்று வந்துவீச

பருவம் சிலிர்த்தது...!

மொட்டவிழ்க்கும் பூக்களும்

பட்டு இதழ் விரித்தது...!

வந்து தீண்டும் வண்டுகளோ

திண்டாடி தவித்தது...!

வண்டருந்தும் தேன்சாறு

வான்நீரில் கலந்தது...!

பூப்பெய்த பூக்களுமே

கன்னித்தன்மை இழந்தது...!

ஏமாந்த வண்டினமோ

எங்கேயோ போனது...?

மழைநனையா பூக்கள் தேடி

மதியிழந்து போனது...!


Poonthotta Kavithaikaran 



-கவிஞர் பூந்தோட்டக் கவிதைக்காரன்

புதன், 29 செப்டம்பர், 2021

அன்புள்ள சினேகிதனே...

அன்புள்ள சினேகிதனே...


டை மழையில் நனைந்தேன்,

குடை கொண்டு வந்தாய்,

வெயில் காலம் நடந்தேன்,

நிழல் போலத் தொடர்ந்தாய்...


என்னை சூழ்ந்த காற்றாய்

சுவாசம் வந்து சேர்ந்தாய்,

எண்ணச் சுமையின் தீர்வாய்-பல

வண்ணம் தீட்டிப் போனாய்...!


விம்மிய விழிநீர்த் துளியை

விரல்நுனி கொண்டு துடைத்தாய்...!

மனதின் குமுறலைக் கூட

மறைய வைத்துக் கடந்தாய்...!


கண்ணீர் துடைத்த கரமா-நீ

கருவிழி போன்ற வரமா...?

நான் சாய்ந்தழுத மரமா-நீ

எனைச் சார்ந்துவந்த சுரமா...?


புயல்மழை தாக்கிய பூமியில்

புதுவிடியலாய் வந்தது நீயடா...

பூகம்பம் வந்த பூவினில்-புதுப்

பனியாய் படர்ந்ததும் நீயடா...!


நான் தொலைந்தத் தடத்தில்-எனை

எடுத்துக் கொண்டவன் நீயடா...!

தொலைக்க விரும்பா உயிராய்-என்

உறவாகிப் போனதும் நீயடா...!


ஓ...

கண்டது எல்லாம் கனவா...?

காணும் பொழுது நனவா...?

கண்கள் மூடிடும் உறவா-நீ

கணநொடி நடந்த நிகழ்வா...?


நடமாடும் கனவை கண்டு-குறு

நகை வெட்கம் கொண்டு,

உயிருக்குள் உன்பார்வை சொட்ட,

நெஞ்சுக்குள் வேர்த்து கொட்ட...


எந்தன் உயிர்நாடி எங்கெங்கும்

உன் ஞாபகங்கள் உறவாடி,

உனக்கே உனக்காக என்னை

உயிலெழுதி வைத்தேன் கண்ணா...!


ஆசைநேசகா அதிரூப சுந்தரா

காலங்காலமாக வாழ்ந்திட வேண்டும்,

கணநொடிக் கனவாய் கலைந்து

தேடித் தொலைய வைக்காதே...!




-கவிஞர் பூந்தோட்டக் கவிதைக்காரன்


வியாழன், 22 ஏப்ரல், 2021

ஓர் புன்னகையில் உருவான கவிதை |உன் புன்னகை தேசம் |கவிஞர் பூந்தோட்டக் கவிதைக்காரன்

(மறைவில் பூத்த மலர்போல அவளின் அழகிய புன்னகை , புன்னகையில் தொலைந்தேன் , எப்படிதான் எனைத் தொலைத்தேனோ...)



மறைவில் நின்று நீ

மத்தாப்பாய் சிரிக்கிறாய்,

மாமரக் கிளையிடையே

மாஞ்சோலை கிளியா நீ...


புன்னகைத்து எனைப்

புலரவும் வைத்தாய்,

காலையிலென் கற்பனையில்

கலவரமும் செய்தாய்...!


பூவின் புன்னகையோ

புரியாத புதிரல்லவா...?

நீயும் அவைகளும்

என்றுமே ஒன்றல்லவா...?


ஒப்பனைச் செய்ய

வார்த்தைகளுக்கு பஞ்சமடி...

கற்பனை மடியிலே

இப்பொழுது தஞ்சமடி...


வயதுக்கு வந்த பருவ

மங்கையாய் இழுக்கிறது

உன் இதழோரத்தில்

மலர்ந்த ஈரப் புன்னகை...!


உப்பிய கன்னமிரண்டும்

உற்சாகம் ஊட்டுதடி,

கற்கால கற்சிலையாய்

கண்டபடி சாய்க்குதடி...


முல்லைப் பற்களின்

வெள்ளை நிறமோ,

எல்லை தாண்டியெனைக்

கொள்ளைக் கொள்ளுதடி...


மார்போடு மஞ்சமிட்டு

இழுத்தணைக்கத் தோணுதடி,

நெற்றி வகிட்டு முத்தமிட்டு

நித்தம் சாகத் தோணுதடி...!


மங்கையர் குல சுடர்விழியே

மத்தாளங் கொட்டலாமா...?

மஞ்சள் தாலியொன்று

நான் வந்து கட்டலாமா...?


உந்தன் தேகத்துக்கு

இக்கவி எழுதப் படவில்லை,

உன் புன்னகை தேசத்திற்கே

இக்கவியை புனைந்தேனடி...!



-கவிஞர் பூந்தோட்டக் கவிதைக்காரன்

சனி, 17 ஏப்ரல், 2021

பலமிழந்த தாவணி

பலமிழந்த தாவணி

சரிய விட்டு

சாய்த்து விட்டாய்,

தென்றல் தீண்டியதால்...

சிறு பார்வையில்

வேர்க்க வைத்தாய்

கைகள் உனை வருடியதால்...

பலமிழந்த உன்

தாவணி முந்தியில்

நானோ பலவீனமானேனடி...



-கவிஞர் பூந்தோட்டக் கவிதைக்காரன் 


புதன், 14 ஏப்ரல், 2021

விதியின் விளையாட்டு

 விதியின் விளையாட்டில்

கொஞ்சம் கல்லானேன்,

காலமெனும் உளியால்-எனை

நானே செதுக்குகிறேன்...!


சிலையோ பழங்கலையோ

காத்திருக்கிறேன் நான்,

சிலையாய் உயிரடைவேனா-பழங்

கலையாய் அழிக்கப்படுவேனா...!


பொய்யான உலகமிது

கூடிநின்னு கும்மியடிக்குது,

கைகளைத் கட்டி வைத்து

செதுக்கிப் பார் என்கிறது...!


இது கேடுகெட்ட உலகமடா

உள்ளத்தில் பெரிய கலகமடா

துணிவு கொஞ்சம் இருக்குதடா

தூக்கியெறிந்தே போவேனடா...


விழிகளில் தேங்கிடும் நீரோ

வலிகளைத் தாங்கி நிற்கிறது...!

அது விழுந்தால் அன்றைக்கு

பூவின் காம்பிலும் பூகம்பமே...!


என் இதயத்தை பாறையென்று

உடைத்து விளையாடும் உறவுகளே...

உளி உடைந்தாலுமென் விரல்

நுனியும் எனக்கு உளியாகும்...!


எனக்கென்ற அடையாளம்

அது அழிக்கப்படும் அபாயம்,

போராடுவேன் உயிர் வாழ

நிச்சயமாய் போராடுவேன்...


ஒரு நாள் நீ பார்க்கும்படியே

எனைச் செதுக்கி வைப்பேன்,

இது நிச்சயம் நடக்கும்-பார்

இப்போது என்னைத் தூற்று...!


சிலந்தி வலையில் சிக்கியச்

சின்னப் பூச்சி போலதான்

புறம்பேசும் உன் வாயிலே

சிக்கித் தவித்துக் கொண்டேன்...


வலையென்ன உன் வாய்ச்

சொல்லையும் அறுத்தெறிந்து 

ஒருநாள் விடுதலையாவேன்-நான்

வளர நீயுமெனக்குத் தேவைதான்...



-கவிஞர் பூந்தோட்டக் கவிதைக்காரன்


செவ்வாய், 13 ஏப்ரல், 2021

அதிசயமும் அற்புதமும்

அதிசயமும் அற்புதமும்


மோகன மௌனம்,

ஊமை சிரிப்பு,

ஊர்வலம் போகும்

ஒற்றை நிலவு...

அவள்தான் அதிசயமாய்

ஆர்ப்பரிக்கும் அதிசய

மலரும் அவளேதான்...

ஒற்றைக் காலில் அல்ல

இரட்டைக் காலில் நடமாடும்

அற்புத மலரும் அவளேதான்...!




-கவிஞர் பூந்தோட்டக் கவிதைக்காரன்

செவ்வாய், 6 ஏப்ரல், 2021

கல்லறைக்குள்

 கல்லறைக்குள்


பெண்ணே...

என் கல்லறையை

நீ பார்க்க நேர்ந்தால்...

எனது சின்ன ஆசையை

ஒரு முறை நிறைவேற்றிவிடு,


நாம் காதலித்த 

அத்தனை நாட்களின்

நினைவுகளையும் 

என் நெஞ்சோரமாய்

உன் கண்ணீரில் நனைத்து விடு,


கல்லறைக்குள் 

பூமியின் உஷ்ணம்

என் இதயத்தை வேக

வைத்துக் கொண்டிருக்கிறது!


உன் கண்ணீரால்

குளிர வைத்து விடு...

வேகும்பொழுதும் உன் கண்ணீரில்

குளிர்ந்து கொண்டிருப்பேன்...



-கவிஞர் பூந்தோட்டக் கவிதைக்காரன்

ஞாயிறு, 22 நவம்பர், 2020

அம்மா

அம்மா


யிரம் குறைகூறி

அம்மாவை அதட்டினாலும்

அம்மா இல்லாமல்

அகிலம் இல்லை...


அரியணைகள் ஏறினாலும்

ஆகாயம் தாவினாலும்

அம்மா மடிபோல

எதுவும் இல்லை...


தியாகத்தின் மறுபாதி

அன்னை அவளே...

வலிகளை தாங்கிக்கொண்டு

நமையீன்றது அவளே...!


புழுப்பூச்சி அண்டாமல்

உறங்காமல் காத்தாள்,

பசிதாகம் எடுக்காமல்

அவளையே உணவாக்கினாள்...!


இரத்தமும் சதையும்

பாலாய் பிழிந்தாள்,

பசித்த நேரமெல்லாம்

பக்குவமாய் ஊட்டினாள்..!


பிறை நிலவாய் 

நமைக் காண

பத்து மாதங்கள்

பௌர்ணமி மறந்தாள்..!


அழகான சுமையென்று

அடைகாத்துக் கொண்டாள்,

ஈரைந்து மாதத்தில்

நமையீன்று எடுத்தாள்...!


நாம் உதைத்தால்,

அவளுக்கு வலித்தால்,

தன் மூச்சையடக்கி

நமக்கும் மூச்சுவிடுவாள்...!


பத்தே மாதம்தான்

பகலிரவு பத்தியம்,

பத்துயுக வலிகளும்

அங்கேதான் கண்டாள்...!


ஆகாயம் இடிஞ்சாலும்

அவளே அம்மா...!

அம்மாயென்ற வார்த்தை

என்றுமேயில்லை சும்மா...!




-கவிஞர் பூந்தோட்ட கவிதைக்காரன்

புதன், 11 நவம்பர், 2020

கல்லறை காதலன்

கல்லறை காதலன்


ண்கள் உறங்கவில்லை

பெண்ணே உன்நினைவோ

கத்திபோல குத்துதடி-மனம்

கத்திகத்தி வலிதேடுதடி...!


வாழ்க்கையோ என்னவென்று

எனக்கின்னும் விளங்கவில்லை,

விதி போடும் கணக்கிற்கு

விடை எழுத முடியவில்லை...!


இதயமோ வலிக்கிறதை-எனக்கு

சொல்லத் தெரியவில்லை,

இதயம் உடைந்து போனதை

ஒட்டி வைப்பார் யாருமில்லை...


உடைபட்ட துகள்களெல்லாம்

உயிரைத்தேடி கிழிக்கிறதே...

கிழிக்கப்பட்ட என்னுயிரோ

ரணமாய் என்னுள் துடிக்கிறது...!


இதயத்தின் ஈரமெல்லாம்

இறுக்கிப்பிழிந்து போனாயே...

இன்னும் கொஞசம் துடிப்போடு

வலிதாங்கிக் கொல்கிறது...!


கண்ணே நம் காதலை

தியாகம் நீ செய்வதற்கு

உன்னவன் என்ன யாகம்

வளர்த்தானோ தெரியவில்லை...


மணக்குமத்தனை பூக்களும்-என்

பிணத்தை மூடிக்கிடக்கிறதே...

நானுயிராய் நினைத்த காதலும்

கல்லறை தேடிப் போனதே...


ஈரமிருக்கிறதா பெண்ணே-உன்

கண்களில் ஈரமிருக்கிறதா...!

ஈரமிருந்தால் ஒருமுறை-என்

கல்லறைக்கு வந்துபோய் விடு...


நானிறந்த சேதியை-உனக்கு

யார் சொல்ல வருவாரோ...

நீசெல்லும் திசையெல்லாம்

என்னுயிரோ தினம் வரும்...!


காற்றோடு கலக்கப்பட்டேன்

உன்மூச்சில் குடிபுகுவேன்,

சம்மதமே இல்லாமல்-உன்

பக்கம் கூட வரமாட்டேன்...!


நீயெனைப் புடைத்தெடுத்தாய்

நானோ புதைக்கப்பட்டேன்,

புதுப்புதுக் கவிதைகளை

தினமெழுதி வைத்துவிட்டேன்...!


ஒருமுறை வந்துபாரடி-என்

கல்லறையோ கவிதையாகும்,

கவிதைக்குள் நானோ

கவிஞனாய் குடியிருப்பேன்...!





-கவிஞர் பூந்தோட்ட கவிதைக்காரன்




புதன், 4 நவம்பர், 2020

அல்லிராணியின் முகப்பரு

அல்லிராணியின் முகப்பரு


அல்லி ராணியிவள்

ஆகாயம் போலிருந்தாள்,

ஆங்காங்கே நட்சத்திரமாய்-அவள்

முகத்தில் செம்புள்ளிகள்...

ஹார்மோன் வாசிக்கும்

ஆர்மோனிய இசைதான்

அவளைப் பார்த்தபின்

எனக்குள்ளே கேட்கிறது...!


Poonthotta Kavithaikaran

-கவிஞர் பூந்தோட்ட கவிதைக்காரன்




வெள்ளி, 30 அக்டோபர், 2020

தடைசெய்த பகுதி...

தடைசெய்த பகுதி


காற்றுக்கும் அவள்

தடையிட்டப் பகுதி

நோக்கியே படைகொண்டு

நுழைகிறது மழைத்துளிகள்...!

அவனுக்கோ அந்த

துளிகளிடம் பொறாமை...!


Poonthotta Kavithaikaran 

அவளையோ இழுத்தணைத்து

இடுப்போரம் இறுக்கினான்...

இனியெங்கே நீ செல்வாய்

என்றே அத்துளிகளுக்கும்

தடையிட்டுத் துடைத்தான்

கருப்புதட்டால் அவளிடையை...!



Video



-கவிஞர் பூந்தோட்ட கவிதைக்காரன்

வியாழன், 29 அக்டோபர், 2020

சித்திரப் பேரழகு...

சித்திரப் பேரழகு...

(ஒரு நாள் அடகுக்கடை சென்றிருந்தேன்,அங்கேதான் அவளைக் கண்டு இக்கவி வரிகள் ஊற்றெடுத்தன, அடகுக்கடை தேவதை என் மனதை அடகாய் எடுத்துவிட்டாள்...)


மையிட்ட விழிகொண்டு

மயக்கம் தந்தாயடி,

மூன்றாம் உலகப்போரினை

முன்கூட்டிச் செய்கிறாயடி...!


கலங்கரை விழிகளால்-காதல்

வழிகாட்டி விட்டாயடி...

பாதையறியா பேதைக்கு-முழு

போதயினை கொடுத்தாயோ...!


உன்விழி ஆழத்தை-அதில்

விழுந்தும் நானறியலையே...

எனையெங்கேயோ கூட்டிப்போய்

ஏதேதோ செய்கிறதே...!


அடிமனதின் ஆதங்கமோ

நொடிப்பொழுதில் வருகிறதே...

உன்னாபத்தான விழிதேடி

வழியெல்லாம் காக்கிறதே...!


உந்தன் விழிகளை வரைந்த

ஓவியன்தான் யாரடி...?

ஒருமுறை சொல்லடி 

அவனுக்கு பூஜைசெய்ய...


பிரம்மிக்க வைக்கவே-உனை

பிரம்மன் படைத்தானோ...?

கம்பனைக் கூடவைத்து-உன்

கண்களை செய்தானோ...!


கவிகள்பல பேசும்

உந்தன் கண்களோ...

ஓவியமாய் வரையுதே

உனையெந்தன் நெஞ்சிலே...


நான் கவிஞனாய்மாறி

கவிதை பலகண்டேன்,

உன் விழிகள்போலவே

எந்தக்கவியும் காணலையே...


அறுவை சிகிச்சை

இல்லாமலே என்னிதயம்

மாற்றப்பட்டது போல்

எனக்குள் எண்ணங்கள்...


அசைவப் பார்வையோ

உன்சைவ விழிகளிலே...!

எனைத்தின்று ஏப்பமிட்டு

அசைபோட்டு மெல்கிறதே...!


என்னதான் செய்தாயோ

இடிக்கும் அஞ்சாநெஞ்சத்தை,

மின்னலாய் வந்தென்

நெஞ்சைத் தாக்கிவிட்டாயே...!


மயிலிறகாய் உன்

இமை முடிகளோ

என்னிதயம் வருடுகிறது,

ஆழ்மனதை நெருடுகிறது...!


ஆழியின் ஆழத்தை-உன்

விழிகளில் கண்டேனடி,

விழுந்தேனடி பெண்ணே-இனி

தூங்காதென் கண்ணே...!


நித்திரை பறித்த

சித்திரப் பேரழகு

உன்பவள விழிகளொ

அத்தனை அழகு...!


அகிம்சையான உன்விழியோ

வன்முறையைத் தூண்டுதடி,

சேதங்கள் இல்லாமலே

கலவரங்கள் செய்யதடி...!


அடகுக்கடை தேவதையே-எனை

அடகாய் எடுத்தாயோ...?

என்னை மீட்டுப்போக-எனக்கு

வழியின்றித் தவிக்கிறேனே...


எத்தனைபேரை சாய்த்த

கூர்கத்தி உன்விழியோ...!

என்னையும் கூறுபோட்டு

குத்தாட்டம் போடுகிறது...!


பூவையுன் விழியோ-என்னில்

பூக்களைத் தூவுதே...

அதிகாலை வெண்பனியாய்

எனை குளிரவைக்குதே...!


நேர்கொண்ட என்பார்வையை 

தடுமாற வைக்குதே...

இதுவரையிலும் புரளாமனம்

எதுகைமோனையில் புரளுதே...


புதிரான உன்விழியோ-பூக்கள்

பூக்கவும் தடையிடுதே...

உன்னைப்பார்த்த பின்னாலே

எனையுன்னில் இழந்தேனே...!


ஒருமுறை எனைப்பாரடி

ஓராயிரம் முறைப்பூப்பேன்,

மறுமுறை உனைப்பார்த்தால்-என்

மனதையே உன்னிடந்திறப்பேன்...!




-கவிஞர் பூந்தோட்ட கவிதைக்காரன்


புதன், 28 அக்டோபர், 2020

மனிதர்கள் வாழும் காடு...

மனிதர்கள் வாழும் காடு


ண்ணங்கள் கொட்டிக் கிடந்தும்

பல வண்ணங்கள் தீட்டப்பட்டும்,

எவராலும் ரசிக்கப்படாத ஓர்

அழகிய இதயம் அவளுக்கானது...


அனுமதி கொடுக்கப்படாத பல

கனவுகள் அங்கு ஏராளம்,

தடைசெய்யப்பட்ட நினைவுகளும்

அங்கு தாராளம் உண்டு...


கனவுகளில் கட்டி வைப்பாள்

எவராலும் கட்டப்படாத மாளிகை,

அவள் எண்ணங்களோ அங்கு

பல்லாயிரம் ஓவியங்கள் ஆகும்...


ஆசைகளை அடக்கி வைத்திருக்கும்

அழகிய பெட்டகம் அவளிதயம்,

அவள் ஆசைகளை நிறைவேற்ற 

அவன் ஒருவனுக்கே அனுமதி...


ஊர் எல்லையை கூட

அவள் தாண்டினது இல்லை,

ஆகாய எல்லை வரையிலும்

அவளுக்குள் ஆசை உண்டு...


அவள் வயதோ மூவேழு

வாக்கப்படும் நாளுமேழு

எந்த திசைக் கண்ணனோ-இவளை

கொள்ளையிடும் மன்னவன்...!


எதிர்ப் பார்த்த அந்நாளோ...!

நெருங்கிவரும் நன்நாளோ...!

ஆசை கனவுகள் எல்லாம்

அங்கீகாரம் பெறும் இந்நாளோ...!


அவளுக்கான இதயம் அது...!

அவனுக்கு மட்டுமே அது...!

கெட்டி மேளம் கொட்டிட

அவனோ தாலிக்கொடி கட்டிட...!


இனிதே ஆரம்பமானது இல்லறம்....!

ஒருநாள் இரண்டுநாள் என

அப்படியே நாளுக்கு நாள்

நகர்ந்து கொண்டே போனது...!


இவள் கட்டிவைத்த கோட்டையின்

ஓவியங்கள் களவாடப்பட்டது...

வர்ணங்கள் அத்தனையும் அவனால்

கலைக்கப்பட்டு கலை இழந்தது...!


கனவுகளோ சிதைக்கப் பட்டு,

நினைவுகளோ உடைக்கப் பட்டு,

கோட்டையோ சரிக்கப் பட்டு,

கதிகலங்கிப் போனது அது...!


ஒன்றல்ல இரண்டல்ல அவளின்

ஓராயிரம் ஆசைகளும் அழகிய

பெட்டகத்தோடு அவன் ஒருவனால்

நாடு கடத்தப்பட்டு போனது...


குடித்து வெறித்து நடந்தான்,

குடித்தனம் விட்டு போனான்,

குடிவைக்க கூட்டி வந்தவளின்

கூட்டைக் கலைத்து போனான்...!


பத்தினிப் பெண்ணின் பத்தியத்தை

பார்க்க பாய்ந்தவர்கள் உண்டு...

பயந்தவளோ என்ன செய்வாள்..!

ஓடினாள் கண்ணுக்கெட்டாத தூரம்...


அங்கே தூரத்தெரிந்த கோபுரம்

கோவிலென உள் நுழைந்தாள்,

தஞ்சம் கேட்டு தானலைந்தாள்-அங்கும்

மஞ்சமிடச் சொல்லும் கயவர்களே...!


கண்ணில் நீர் வழிந்தோட

மனதின் குமுறலோடு அழுதாள்...

அழுதாலும் விடவில்லை-அவளது

பூமேனி உழப்பட்டு உதறப்பட்டாள்...!


குற்றுயிரோடு அவளைக் கண்டு

குள்ளநரி கூட்டங்கள் ஓடியது,

மனிதர்கள் வாழும் காட்டில்

கவனத்தோடு ஓட மறந்தாள்...


குருதி உறைந்து போய்

உருக்கப்பட்ட மெழுகானாள் அவள்,

அவளது அழகிய சோலையோ

பாலைவனக் கானலானது இன்று...!


காகிதக் கப்பலுக்கும் அங்கு

இடமில்லை என்று வாசிக்கப்பட்டது,

அவளுடல் விட்டுப்போன உயிரின்

குமுறல்களோ இன்றும் கேட்கிறது...


எண்ணங்களும் வண்ணங்களும்

நிறைந்த அவளாசைகளோ

தண்ணீரில் போடப்பட்டு அழிந்த

ரங்கோலி கோலங்கள் ஆனது...


Video


-கவிஞர் பூந்தோட்ட கவிதைக்காரன்